பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்- பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது.
- மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு இணையாக திருப்பூர் மாநகராட்சிக்கும், திருப்பூர் மாநகராட்சியை விட அதிகமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு வரி விதிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது. மின் கட்டண உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் அதனை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சி வரும் போதெல்லாம் தொழில்துறையினர் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் மட்டும்தான் அதுபோன்று இன்னொரு மாநாட்டை நடத்த முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு . எம்ஜிஆர்., அறிமுகப்படுத்தி கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டத்தில் எம்ஜிஆரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் தி.மு.க. வேறொரு பெயரினை வைத்து மறைத்து வருகிறது. இதே நிலை தொடருமானால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டிலிங்கம், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், பி.கே. முத்து, திலகர் நகர் சுப்பு, மற்றும் ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.