தமிழ்நாடு

கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்

Published On 2024-07-10 05:48 GMT   |   Update On 2024-07-10 05:48 GMT
  • டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
  • கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

மதுரை:

தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இதற்கிடையே கடந்த வாரம் உள்ளூர் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பல்வேறு அமைப்புகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று கப்பலூர் டோல்கேட்டில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டோல்கேட்டை மூட வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், டாக்டர் சரவணன், மகேந்திரன், தமிழரசன், பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரின் முற்றுகை போராட்டம் காரணமாக கன்னியாகுமரி முக்கிய நெடுஞ்சாலையான கப்பலூர் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.

தற்போது உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் 50 சதவீத கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

எனவே டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த அரசு மக்கள் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை.

மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் இருக்கும்பொழுது டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது.

கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சனையில் எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அடக்குமுறைக்கு அஞ்சாமல் எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News