தமிழ்நாடு (Tamil Nadu)

விலகி சென்றவர்களுக்கு அ.தி.மு.க. வலைவிரிப்பு- மீண்டும் கட்சியில் சேர்க்க ரகசிய உத்தரவு

Published On 2023-03-22 06:16 GMT   |   Update On 2023-03-22 06:16 GMT
  • சமீபத்தில் பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பதவி வழங்குவதில் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
  • அதிருப்தியில் இருந்தவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றவர்களாக இருந்தாலும் சரி, மற்ற கட்சிகளுக்கு சென்றவர்களாக இருந்தாலும் சரி. அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க முயற்சிக்கும்படி அனைத்து மாவட்டங்களுக்கும் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பா.ஜனதா நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது இரு கட்சிகளுக்குள்ளும் உரசலை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. தலைமைக்கு இணையாக தன்னை முன்னிலைப்படுத்துவதை அ.தி.மு.க. விரும்பவில்லை. அண்ணாமலை தமிழக பா.ஜனதாவுக்குத்தான் தலைவர். டெல்லி தலைமைக்கு அல்ல என்று ஏற்கனவே விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில் தான் பா.ஜனதா தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் கங்கா தேவி ஏற்கனவே அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தவர்.

அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததும் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது பதவி வழங்குவதில் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தியில் இருந்தவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பா.ஜனதா மாநில தலைவராக மத்திய மந்திரி எல்.முருகன் பொறுப்பேற்ற காலகட்டத்தில் இருந்தே மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்களை பா.ஜனதாவுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கியது.

இதனால் பா.ஜனதாவுக்கு பல புதுமுகங்கள் வந்தது. இந்த இணைப்புகளின்போது கட்சி பதவி உள்பட பல உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல் அனைவரையும் திருப்தி படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதும் இந்த விலகல்களுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த வரிசையில் தான் ஆயிரம் விளக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க. செல்வம் பா.ஜனதாவில் இணைந்து போன வேகத்திலேயே திரும்பி வந்து மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் கேட்ட போது, 'மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜனதா மாறுபட்டது. இதன் சித்தாந்தம், கொள்கைகள், செயல்பாடுகள் மாறுபட்டது.

எனவே புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது முக்கியம். எந்த பொறுப்பும் இல்லாமல், பல ஆண்டுகளாக கட்சியில் பலர் இருப்பதற்கு அதுவே காரணம்' என்றனர்.

Tags:    

Similar News