தங்கம் வாங்க நகைக்கடைகளில் குவிந்த பெண்கள்
- சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
- பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன.
சென்னை:
அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தங்க நகை வாங்க முடியாதவர்கள் கையில் இருக்கும் சேமிப்பை வைத்து ஏதாவது சிறிய தங்க நாணயத்தையாவது வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியைக்கு நகைக்கடைகளில் தங்கம் அமோகமாக விற்பனையாகிறது.
இந்த ஆண்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திரிதியை தினம் ஆகும். அட்சய திரிதியை இன்று காலை 6.33 மணிக்கு தொடங்கி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அமோகமாக நடந்தது.
சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.
மேலும் நகைக்கடைகளில் இன்று கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களாகவே நகைக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்து 25 சதவீத பணம் செலுத்தி முன்பதிவு செய்து வைத்திருந்தனர். அவர்கள் அட்சய திரிதியையான இன்று நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை வாங்கினார்கள்.
அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் கூடியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த அன்று இருந்த குறைந்த விலைக்கே தங்கத்தை வாங்கி மகிழ்ந்தனர். முன்பதிவு செய்யாதவர்கள் இன்றைய விலைக்கு தங்கத்தை வாங்கினார்கள்.
மேலும் பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன. சில கடைகளில் தங்க நகைகள் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி, வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டன. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டன. பழைய தங்கத்தை இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக்கொள்ளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்று வாடிக்கையாளர்கள் நகை வாங்கினார்கள்.
தங்க நாணயம் வாங்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடைகளில் தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். அட்சய திரிதியை விற்பனைக்காக சென்னையில் உள்ள பெரிய நகைக்கடைகள் எல்லாமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்கடைகள் எல்லாமே விளக்கொளியில் ஜொலித்தன.
தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. அனைத்து நகைக்கடைகளிலுமே இன்று தங்கம் விற்பனை மிகவும் அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. தி.நகர் உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கியமான வணிக பகுதிகள் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் நகைக்கடைகள் அதிகம் உள்ள இடங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நகைக்கடைக்காரர்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக அட்சய திரிதியை சலுகைகளை இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு வழங்குகிறார்கள். இதனால் இந்த 3 நாட்களும் தங்கம் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திரிதியைக்காக நகை வாங்க விரும்புபவர்கள் இன்று இரவு வரை நகை வாங்க வருவார்கள் என்பதால் இன்று நள்ளிரவு வரை நகைக்கடைகளை திறந்து வைத்து நகைகளை விற்பனை செய்யவும் நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் சென்னையில் சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தங்க நகைகள் வாங்க விரும்புபவர்களுக்கு வீடுகளுக்கு வாகன வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
அட்சய திரிதியை விற்பனை குறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-
அட்சய திரிதியையொட்டி இன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். இன்று காலையில் இருந்தே நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பொறுமையாக நகை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து இன்று நள்ளிரவு வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு அட்சய திரிதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. வைர நகைகளும் புதிய டிசைன்களில் அதிக அளவில் உள்ளன.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அப்போது நகை விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை நகருக்குள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல தடை இல்லை என்பதால் தேர்தல் நேரத்தில் நகை வாங்குவதை தவிர்த்தவர்கள் இப்போது நகை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்க நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரவு நேரத்தில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.