தமிழ்நாடு (Tamil Nadu)

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்வதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2024-10-09 06:20 GMT   |   Update On 2024-10-09 06:20 GMT
  • கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
  • மக்கள் விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றி உள்ளனர்.

அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது.

தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒரு போதும் மன்னிக்காது. மக்கள் விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News