தமிழ்நாடு (Tamil Nadu)

பந்தல் அகற்றப்பட்ட போதிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர்கள்: போலீசார் குவிப்பு

Published On 2024-10-09 05:34 GMT   |   Update On 2024-10-09 05:37 GMT
  • நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர்.
  • இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என போராட்டக்காரர்கள் கேள்வி.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்நது ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு திடீரென போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றினர். அத்துடன் வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான நபர்களை கைது செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலையும் தொழிலாளர்கள் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அந்த இடத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என தொழிலாளர்கள் கேள்ளி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

Tags:    

Similar News