சாம்சங் தொழிலாளர்கள் கைது: உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு
- பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
- போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.