சமூகநீதி குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- அன்புமணி ராமதாஸ்
- சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார்.
- அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான பூங்கோதை அதே ஒன்றியத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாரிவண்ண முத்து என்பவரால் தமக்கு இழைக்கப்படும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார். இது அதிர்ச்சியளிக்கிறது.
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பூங்கோதைக்கு முறையான நாற்காலி, மேசை கூட வழங்கப்படவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே அவர் பதவி விலகியிருப்பதாகவும் அவரது கணவர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பான்மையான உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத தி.மு.க.வுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.