தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக நலனை தி.மு.க. அரசு தாரைவார்த்து விட்டது: அன்புமணி ராமதாஸ்

Published On 2023-12-07 10:07 GMT   |   Update On 2023-12-07 10:07 GMT
  • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது.
  • ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி. மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News