தமிழ்நாடு

வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை- பாலகிருஷ்ணன்

Published On 2023-12-19 07:13 GMT   |   Update On 2023-12-19 07:13 GMT
  • பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

திண்டுக்கல்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னை மக்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் தற்போது நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் நிவாரணம் வழங்கவேண்டிய மத்திய அரசு முழுமையாக வழங்காமல் ஆய்வுக்குழுவை அனுப்புவதாக பாரபட்சம் காட்டுகிறது. மாநில அரசு கேட்கும் நிவாரணத்தில் பாதிஅளவு கூட மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த 100 வருடமாக நீர்நிலைகள், குளங்களை பாதுகாக்க தவறியதே இதுபோன்ற இயற்கை பேரழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

எனவே தமிழகத்தில் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற இயற்கை பேரிடரை சமாளிக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வருகிற 23-ந்தேதி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிப்பது குறித்து ஆய்வுகள் சேகரிக்கப்பட்டு அதனை அரசுக்கு வழங்க உள்ளோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை வைத்து அரசியல் செய்யும் முயற்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறப்பாக கையாண்டதாக மத்திய குழுவே பாராட்டி சென்றுள்ளது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.


பாராளுமன்றத்தில் 2 இளைஞர்கள் உள்ளே புகுந்து கலர்புகை குண்டுகளை வீசி சென்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மிகுந்த பகுதியான பாராளுமன்றமே கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்.பிக்கள் 92 பேரை பா.ஜ.க அரசு சஸ்பெண்டு செய்துள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரியதற்காக எதிர்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்டு செய்துவிட்டு பாராளுமன்றத்தை பா.ஜ.க பொதுக்குழுபோல நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க தனது கடமைகளை சரிவர செய்யாததால் கடும் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை மறைத்து எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு எடுத்த முடிவின்போது அதற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்தவித பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இவர்கள் எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மதுக்கூர்ராமலிங்கம், பாண்டி, சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News