கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல் சூளை அதிபரை கொன்ற கும்பல்- 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளார். நேற்று இரவு ஏசுதாசன் செங்கல் சூளையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஏசுதாசனை வழி மறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ஏசுதாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ஏசுதாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற் கொண்டனர். ஏசுதாசன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட ஏசுதாசன் அதே பகுதியை சேர்ந்த அன்புவின் உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை இங்கு அழைத்து வந்தார். இதனால் அன்புவிற்கும், ஏசுதாசனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் அன்பு பழிக்கு பழியாக ஏசுதாசனை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.