குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மணிமுத்தாறில் குளிக்க தடை
- தென்காசி மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
- மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக சில தினங்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலை காணப்பட்டது. தற்போது இந்த மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.