பவானியில் இன்று தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
- மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள்.
- பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானி:
பவானி பழைய வார சந்தை ரோட்டில் சுமார் 65 செண்ட் இடத்தில் பவானி காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இங்கு சுமார் 180-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த காய்கறிமார்க்கெட் நீண்ட ஆண்டுகளாக இந்த பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த வியாபரம் மற்றும் சில்லரை வியாபாரமும் நடந்து வருகிறது. மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள். மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஊட்டி, மைசூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
அதே போல் கடை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள்.
இந்த மார்க்கெட் அருகே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் பவானி சேர்ந்த பொது மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்குகிறார்கள். இதே போல் திருவிழா மற்றும் விஷேசங்களுக்கு தேவையான காய்கறி, வாழை இலைகள் என பல பொருட்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பகுதி ரூ.1.30 கோடி செலவில் புதிய தினசரி மார்க்கெட்டு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் புதிய காய்கறி சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பவானி நகராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடந்தது.
இதில் ஒரு தரப்பினர் பழைய இடத்தில் சந்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் புதிய பஸ் நிலையம் அருகே காய்கறி சந்தை அமைக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் பழைய பஸ் நிலையம் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதனால் புதிய காய்கறி சந்தை அமைப்பது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாமல் இது நாள் வரை இருந்து வந்தது.
இந்நிலையில் பவானி நகர்மன்ற கூட்ட அரங்கில் அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை கண்டித்தும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய காய்கறி மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) பவானி வட்டார காய், கனி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஒரு நாள் மார்க்கெட் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என வியாபாரிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டு வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் மார்க்கெட்டுக்கு செல்வதற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் என 3 வழிகள் அமைந்து உள்ளது. அந்த 3 வழி கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இது பற்றி தகவல் தெரியாமல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்து இருந்தனர். மார்க்கெட்டு மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனால் பவானி நகராட்சி பகுதியில் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் பழைய இடத்தில் இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா அல்லது புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்படுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.