தமிழ்நாடு (Tamil Nadu)

அண்ணாமலை வீடு முன்பு கொடிக்கம்பம் அகற்றம்- அமித்ஷா தலையிட பா.ஜ.க. குழு கோரிக்கை

Published On 2023-10-29 06:30 GMT   |   Update On 2023-10-29 06:30 GMT
  • தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகு பா.ஜனதாவினர் மீது 409 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
  • பா.ஜனதாவினர் கொடுக்கும் புகார்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர். கூட போடுவதில்லை.

சென்னை:

தமிழக அரசு பா.ஜனதாவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் பா.ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை மேலிடம் அனுப்பி வைத்தது.

இந்த குழுவினர் பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரித்தார்கள். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.

தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகு பா.ஜனதாவினர் மீது 409 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் 70 சதவீதம் வழக்குகள் சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்ட பதிவுகளுக்காக போடப்பட்டுள்ளது.

அண்ணாமலை வீடு முன்பு கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் 6 பேர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவினர் கொடுக்கும் புகார்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர். கூட போடுவதில்லை.

மசூதி அருகே இருந்ததால் தான் பா.ஜனதா கொடிக் கம்பத்தை அகற்றியதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தி.மு.க. கொடிக் கம்பம் இருக்கிறது. அந்த கொடிக் கம்பம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கொடிக்கம்பம் தெருவுக்குள் அண்ணாமலை வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்ற என்ன அவசியம் வந்தது.

அரசு நிர்வாகமும் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் எண்ணத்தில் செயல்படுவது தெரிகிறது.

இந்த விஷயத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலையிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை மேலிட குழுவினர் அமித்ஷாவிட மும், அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவிடமும் வழங்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழலில் மத்திய உள்துறை தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News