கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
- கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
- கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக மழையும் காற்றும் அதிகமாக உள்ளது. இதனால் அவ்வப்போது கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
அதேநேரம் வங்கக்கடல் மட்டும் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கடல் திடீரென உள் வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். அவர்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.
கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.