சிறுவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்
- உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
இவர் கப்பல்வாடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவன் நேற்று மாலை சக்கில்நத்தம் கிராமத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருது மாந்தோப்பில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இதனால் அங்கு சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்படடோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் 6 மணி நேரம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் டி.எஸ்.பி. முரளி கிராம மக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து மாந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றிய பர்கூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மாந்தோப்பு பகுதிகளில் தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு யாராவது சிறுவனை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.