தர்பூசணியில் ஊசி போட்டு ரசாயனத்தை சேர்க்கும் கொடூரம்- வயிற்று வலி, கண் பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம்
- வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது.
- சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள்.
சென்னை:
கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புகளை தடுக்கவும், தாகத்தை தணிக்கவும் தர்பூசணி மிகவும் சிறந்தது.
சென்னையில் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 1 கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி வாங்கி சாப்பிடுகிறார்கள். தர்பூசணியை ஜூஸ் போட்டும் குடிக்கிறார்கள்.
வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது. சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள். இந்த பழங்களை வாங்கி சாப்பிடும் போது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
சிவப்பு நிற ரசாயன வண்ணத்தை தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தர்பூசணிக்குள் செலுத்தி விடுகிறார்கள். தர்பூசணியின் பல பக்கங்களில் இருந்தும் ஊசி மூலம் ரசாயன வண்ணத்தை செலுத்துவதால் தர்பூசணி பழத்தின் உள்புறம் நன்றாக சிவப்பாக மாறுகிறது. இதனால் நன்றாக பழுத்து இருப்பதாக நினைத்து பொதுமக்களும் அதை சாப்பிடுகிறார்கள்.
செயற்கை வண்ணம் கலந்த தர்பூசணியை சாப்பிடும்போது முதலில் நாக்கு சிவப்பாக மாறும், வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வாந்தி, மூச்சிரைப்பு, டயாரியா, வலிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தர்பூசணியில் ஊசி மூலம் இந்த ரசாயன வண்ணத்தை கலந்து விடுகிறார்கள். இதனால் பழத்தின் வெளிப்புறத்தை பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் பழத்தின் உள்பகுதிக்குள் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கும். எனவே தர்பூசணி வாங்கும்போது மிகவும் உஷாராகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பழத்தின் வெளிப்புறத்தை நன்றாக உற்று கவனித்தால் ஊசி ஏற்றப்பட்டதற்கான அடையாளம் தெரியும். சில நேரங்களில் எலி பிராண்டியது போன்ற அடையாளமும் காணப்படும். எனவே அது போன்ற அறிகுறிகள் தெரியும் தர்பூசணி பழங்களை யாரும் வாங்கக் கூடாது.
ஒரு வேளை ஊசியின் தடம் பதித்திருப்பது தெரியாத நிலையில் பழத்தை வாங்கி விடலாம். ஆனால் தர்பூசணியை வெட்டிய பிறகு சிவப்பாக காணப்படும் பழத்தை வெள்ளை நிற கை துடைக்கும் காகிதத்தால் துடைத்து பார்த்தால் அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த காகிதத்தில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து காணப்படும். அதை வைத்து அந்த பழத்தில் செயற்கை வண்ணம் சேர்த்திருப்பதை கண்டறிய முடியும். ரசாயன வண்ணம் சேர்க்காத பழம் என்றால் காகிதத்தில் வண்ணம் ஒட்டாது. அதில் இருந்தே அது நல்ல பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுமக்கள் வாங்கும் தர்பூசணியில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பழத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.