ஒரு சிகரெட் விலை ரூ.1.60 அதிகரிக்கிறது- செல்போன் விலை ரூ.500 வரை குறையும்
- இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை.
- இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மீது தேசிய பேரிடர் தொகுப்பு வரி போடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிகரெட்டின் விலை 5 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரையில் உள்ளது. 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் 10 ரூபாய் சிகரெட்டின் விலை ஒரு ரூபாய் 60 காசு அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் 5 ரூபாய் சிகரெட் 80 காசுகள் உயர்ந்து ரூ.5.80 ஆகும். இதேபோன்று 20 ரூபாய் மதிப்பிலான சிகரெட்டின் விலை 3 ரூபாய் 20 காசு உயர்கிறது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருவதால் சிகரெட் பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
செல்போன், டி.வி. ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலைகள் குறையும். தொலைக்காட்சி பாகங்களுக்கான சுங்கவரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டி.வி. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.வி.யின் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், பேட்டரி மீதான இறக்குமதி மீதான வரியும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன் விலை ரூ.500 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரியதர்ஷினி செல் யூனிவர்ஸ் நிறுவனர் எம்.ஜி.சுரேஷ் குமார் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் செல்போன்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களின் விலை இனி குறைய வாய்ப்பு உள்ளது.
இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை. இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.
இருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள் விலை 5 சதவீதம் வரை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களின் விலை ரூ.500 வரை குறையும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.