தமிழ்நாடு

ஷர்மிளாவை தொடர்ந்து மேட்டூரில் கலக்கும் தமிழ்ச்செல்வி

Published On 2023-06-25 11:52 GMT   |   Update On 2023-06-25 11:52 GMT
  • கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
  • எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது.

மேட்டூர்:

ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது. தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். கோவைைய தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களம் இறங்கி உள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர், செட்டிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 28). சிறு வயது முதலே கனரக வாகனம் இயக்கி அனுபவம் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் செயல்பட்டு தனியார் மகளிர் கல்லூரியில் பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தார். இந்த கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

இதனால் சேலத்தில் முதல் முறையாக கல்லூரி பஸ்சை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றார்.

இதனிடையே தமிழ்ச்செல்விக்கு வெளி மாவட்டங்களுக்கிடையே பொது பஸ்சை இயக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டும் பணியில் சேர்ந்தார். அவர், தினமும் மேட்டூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இந்த பஸ்சை இயக்கி வருகிறார்.

மேட்டூரில் முதல் முறையாக தனியார் நகர பேருந்தை இயக்கும் முதல் பெண்ணாக திகழும் தமிழ்ச் செல்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

எனக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தேன். தற்போது அந்த பணியில் இருந்து விலகி, தனியார் பஸ்சில் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News