மதுரை அருகே விபத்து: தம்பதி- குழந்தை உள்பட6 பேர் பலி
- அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
- விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இருந்தார்.
அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று அதிகாலை தளவாய்புரத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு விருதுநகர் வந்தனர். அங்கு பங்குனி பொங்கலையொட்டி திருவிழா நடந்து வரும் பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அதே சமயம் வழியில் உள்ள எஸ்.பி.நத்தம் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பின்னால் வைத்திருந்த பழக்கூடையுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த மணி, இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்புக் கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் காரில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தை ஆகியோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்தில் கார் சிக்கியதும் அதில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (வயது 55), காரில் பயணம் செய்த கனகவேல் (62), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி (58), கனகவேலின் மருமகள் நாகஜோதி (28), நாகஜோதியின் குழந்தை சிவா ஆத்மிகா (8) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டும், காருக்குள் சிக்கி உடல் நசுங்கியும் பலியானார்கள்.
மேலும் காரில் இருந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவாஸ்ரீ ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளிக்குடி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இன்று மதியம் மற்றொரு குழந்தையான சிவாஸ்ரீயும் பலியானது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆனது.
விபத்தில் பலியான குழந்தைகள் சிவாஆத்மிகாவும், சிவாஸ்ரீயும் இரட்டை குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மணிகண்டன் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார்.