அமலாக்க துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அழைத்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்- விக்கிரமராஜா
- நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
- முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது. கூடுதல் வரி வசூல் கிடைக்கும், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று அரசு சொன்னது. இதுவரை 12 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுக்கே சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை.
சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது புதிதாக அமலாக்கத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள் என்று செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும்.
போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இது போன்று அமலாக்கத்துறையை, வணிகர் மத்தியில் நுழைய விட்டால் ஜி.எஸ்.டி. சோதனை என்ற அடிப்படையில் முழு அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய வணிகர்கள், வணிகத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும், அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
மத்திய, மாநில அரசுகள் அமலாக்கத்துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.