தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா?- மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி
- மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
- மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை:
மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-
பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.
இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.
இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.
கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?
கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?
பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?
மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி அவர்கள் இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார்.
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 30, 2024
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற 'போலி திராவிட மாடல்' ஆட்சியாளர்களுக்கு, மீண்டும்… https://t.co/UMBhsH5LCl