தமிழ்நாடு (Tamil Nadu)

ஏட்டு செந்தில்குமார் - காதலி கவிதா - டிரைவர் ரவி

கள்ளக்காதலி வீட்டுக்குள் டிரைவர் உடலை இரவு முழுவதும் மறைத்து வைத்திருந்த போலீஸ் ஏட்டு

Published On 2022-06-11 08:01 GMT   |   Update On 2022-06-11 08:01 GMT
  • சென்னை கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் ரவி, கோயம்பேடு போலீஸ் ஏட்டு செந்தில்குமாரால் கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • உடலை எரிப்பதற்கு 10 லிட்டர் பெட்ரோல், 3 கிலோ சர்க்கரை ஆகியவற்றையும் வாங்கி சென்றுள்ளனர்.

சென்னை:

சென்னை கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் ரவி, கோயம்பேடு போலீஸ் ஏட்டு செந்தில்குமாரால் கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை ரவுடிகளுடன் சேர்ந்து மிகவும் கொடூரமாக கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக செந்தில் குமாரின் காதலி கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் ஏட்டு மற்றும் 4 ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

டிரைவர் ரவியின் வீடும், போலீஸ் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா வீடும் எதிர்எதிரே உள்ளது. ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும், கவிதாவுக்கும் ஏற்பட்ட சிறிய தகராறே முற்றி கொலையில் முடிந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில் குமாரை தாக்கி உள்ளார்.

இதனை மனதில் வஞ்சமாக வளர்த்த ஏட்டு செந்தில்குமார் திட்டம் போட்டு ரவுடிகளுடன் சதி திட்டம் தீட்டி இந்த கொலையை செய்திருக்கிறார்.

டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஏட்டு செந்தில்குமார், ஐசக் என்ற ரவுடியுடன் சேர்ந்து சினிமா பாணியில் திட்டம் தீட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஏட்டு செந்தில்குமாருக்கு அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஐசக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்கள் போல பழகி உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் ரவிக்கும், செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செந்தில்குமார் தாக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமாரின் காதலியான கவிதா, "நீங்கள் எவ்வளவு பெரிய ஆள், உங்களை சாதாரண ஆளான அவன் (ரவி) அடித்து விட்டானே, அவனை சும்மா விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

காதலி கவிதாவின் இந்த பேச்சுக்கள் ஏட்டு செந்தில்குமாரின் மனதை மாற்றியுள்ளது. டிரைவர் ரவி தன்னை தாக்கியதை கவுரவ பிரச்சினையாகவே ஏட்டு செந்தில்குமார் எண்ண தொடங்கினார்.

இதையடுத்து செந்தில் குமார், ரவுடி ஐசக்கிடம் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றி எடுத்துக் கூறி எப்படியாவது ரவியை போட்டுத் தள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதன்பிறகே கொலைக்கான திட்டத்தை செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரும் சேர்ந்து தட்டி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து டிரைவர் ரவி, வீட்டில் தனியாக இருக்கும்போது கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காகவே ஐசக், தனக்கு தெரிந்த அடியாட்கள் 3 பேரை தயார் செய்துள்ளார்.

இதன்படி சம்பவத்தன்று, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் மற்றும் கூட்டாளிகள் 3 பேர் என 5 பேரும் சேர்ந்து ரவியின் வீட்டுக்கு சென்றனர். ரவியின் மனைவி ஐஸ்வர்யா தான் பணிபுரியும் ஆஸ்பத்திரிக்கு இரவு வேலைக்கு சென்றிருந்தார்.

இது ஏட்டு செந்தில்குமாருக்கு வசதியாக போய் விட்டது. ஐசக் உள்ளிட்ட ரவுடிகள் 4 பேருடன் ரவியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு போதையில் படுத்திருந்த ரவியை செந்தில்குமாரும், ரவுடி கும்பலை சேர்ந்தவர்களும் மிகவும் கொடூரமாக உயிர்நாடியில் தாக்கி உள்ளனர்.

பின்னர் வெளியில் வந்து எதுவும் தெரியாததுபோல வீட்டை காலி செய்யும் வேலையிலும் ஈடுபட்டனர். ரத்தம் வெளியில் கசியாத அளவுக்கு ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தி ரவியை கொலை செய்துள்ளது. பின்னர் யாருக்கும் தெரியாமல் எதிரில் உள்ள காதலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக உடலை மாற்றினர். அங்கு வைத்து சாக்குமூட்டையில் உடலை கட்டினர். ஒருநாள் இரவு முழுவதும் ரவியின் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் வீட்டை காலி செய்த பொருட்களுடன் சேர்த்து ரவியின் உடல் அடங்கிய சாக்குமூட்டையையும் தூக்கி போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

பின்னர் ஆம்னி வேன் ஒன்றில் தூக்கிபோட்டுக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் பழையனூர் பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளனர். இதில் ரவியின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பழைய ஆம்னி வேனை ஆதம்பாக்கத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர். உடலை எரிப்பதற்கு 10 லிட்டர் பெட்ரோல், 3 கிலோ சர்க்கரை ஆகியவற்றையும் வாங்கி சென்றுள்ளனர். உடலில் சர்க்கரையை போட்டு பின்னர் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக தப்பி ஓடி உள்ளனர்.

இதையடுத்து செந்தில் குமார், ரவுடி ஐசக் உள்பட 5 பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறையினர் மத்தியில் ஏட்டு செந்தில்குமாரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News