தமிழ்நாடு

சென்னை சங்கமம் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும்- கனிமொழி தகவல்

Published On 2023-01-11 05:48 GMT   |   Update On 2023-01-11 05:49 GMT
  • 2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது.

சென்னை:

தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த விழாவின்போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

2011-ம் ஆண்டு வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் போது ஒருங்கிணைப்பாளரும், நிறுவனருமான கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

சென்னை சங்கமம் நிகழ்ச்சி முக்கியமான இடங்களில் நடத்தப்படுகிறது. அண்ணாநகர் டவர் பூங்கா, செம்மொழி பூங்கா, நடேசன் பூங்கா, பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 16 இடங்களில் நடக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை நான் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றி வருகிறார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், குயிலாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் புதிய நாட்டுப்புற கலை வடிவங்களையும், குழுக்களையும் அடையாளம் கண்டுள்ளோம். பன்முகத் தன்மையை வெளிக் கொண்டு வரவும், பாரம்பரிய கலை, நாட்டுப்புற கலை, கானா மற்றும் இசைக்குழுக்கள் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் இதன் கருத்துரு உள்ளது.

கடந்த முறை அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியை போல் அல்லாமல் இந்த முறை அரசே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஒவ்வொரு முறையும் நிகழ்வுகள் நடைபெறும் போது நாங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டோம். மேலும் பல்வேறு உணவுகள் மற்றும் கலாச்சார உணவு வகைகளுடன் கூடிய உணவுத் திருவிழாவை சேர்த்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாவட்டங்களில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நகரத்தில் வெளி கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டின் கலாச்சார தனித்துவம் மற்றும் மொழியின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு உலகளாவிய அளவில் இருக்கும்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும். சங்கமம் போன்ற நிகழ்வுகளை மற்ற மாநிலங்களும் நடத்த விரும்பினால் அவர்களுடன் ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News