தமிழ்நாடு (Tamil Nadu)

திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்- மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-24 05:30 GMT   |   Update On 2023-07-24 08:01 GMT
  • மாநிலம் முழுவதும் 4.57 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.
  • 14,104 குழுக்களில் 1.68 லட்சம் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தமிழ்நாடு முழுவதற்கான திட்டம். நான், எதற்காக தருமபுரிக்கு வந்திருக்கேன் என்றால், அமைச்சர் கூறியதுபோல், 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர்கள் தன்னம்பிக்கையோடும், யாருடன் தயவுமின்றியும், சுயமரியாதையுடன் மகளிர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு என்ற அற்புதமான திட்டம்.

ஏழை, எளிய பெண்களை கொண்டு மகளிர் சுய உதவிக்குழு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு அன்றைய காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி விதைத்த விதைத்தான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் தழைத்து, வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகின்றன. அதில் 51 லட்சம் 46 ஆயிரம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 3லட்சத்து 96 ஆயிரத்து 363 குழுக்களுக்கு ரூ.21,641 கோடி கடனாக வழங்கப்பட்டது.

2006-2011-ம் ஆண்டு ஆட்சியில் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்களை நான் உருவாக்கினேன். அப்போது நான், கடனுதவிகளை பலமணிநேரம் மேடையில் நின்று கொண்டு வழங்கியுள்ளேன். அதையெல்லாம் நான் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

நான், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்ற போது, அரசு நிகழ்ச்சியில் கட்டாயமாக மகளிர் சுயஉதவிக்குழுவை பங்கேற்க வைத்து, அவர்களுக்கு சுழல்நிதி உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேருக்கு நான் வழங்கியுள்ளேன்.

கடந்த காலங்களில் அரசு நிகழ்ச்சி நடைபெறும்போது, ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஒரு சிலருக்கு தான் உதவிகள் கிடைக்கும். ஆனால், நான், துணை முதல்வராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக்குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சுழல்நிதி வழங்கப்பட்டது.

அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெண்களுக்கு தொடர்ந்து நிதிஉதவி கொடுத்து கொண்டிருக்கும் போது, ஒரு மூதாட்டி என்னிடம் வந்து இப்படி நீண்டநேரம் நின்று கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு கால் வலிக்கவில்லையா? என்றார். அதற்கு நான், நீங்கள் எல்லாம் நிதிஉதவி பெற்று செல்லும்போது உங்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை நான் கண்டவுடன் அந்த வலியெல்லாம் எனக்கு தெரியவில்லை என்றேன். இதையெல்லாம் நான்பெருமைப்படுத்தி கொள்வதற்காக சொல்லவில்லை. முறையாக அனைவருக்கும் இந்த திட்டம் போய் சேரவேண்டும்.

எந்த உணர்வோடு மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் கருணாநிதி தொடங்கினாரோ, தற்போது அந்த திட்டம் கம்பீரமாக வளர்ந்து நிற்பதை பெருமையாக பார்க்கிறேன். சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண்தான் தருமபுரி மண்.

இந்த மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1,69.648 மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 8625 குழுக்களுக்கு ரூ.729 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தொடங்கினால் தான் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சென்றடையும் என்பதால் இந்த திட்டத்தை நான் இங்கு தொடங்கி வைத்துள்ளேன்.

சுயமரியாதை கொள்கையில் இறுதியாக இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்து கொடுத்த பாதையில் நான் தமிழ்நாடடை வளமான, வலிமையான மாநிலமாக மாற்ற, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண நாள்தோறும் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

நான் முதலமைச்சராக பதவியேற்றுபின்பு போட்ட முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிர் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேமிக்க முடியும். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டத்தால் மாதந்தோறும் மாணவிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் 2லட்சத்து 11,506 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதேபோன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டம் காமராஜர் கொண்டு வந்தார். அதனை எம்.ஜி.ஆர். முன்னிலைப்படுத்தினார். அதனை மறுக்கமுடியாது. அதன்பின்னர் தி.மு..க. ஆட்சிக்கு வந்தால் சத்துணவு திட்டம் முடக்கப்படும் என்று சிலர் விஷம பிரசாரங்களை பரப்பினர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முட்டையுடன் சத்துணவு திட்டத்தை புதுப்பித்தார்.

காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தினை விரிவு படுத்தபடவுள்ளதால் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது பள்ளியில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம்.

மகளிருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கருணாநிதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனால் மகளிரின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்போது நிறைவேற்றபட்டிருக்கிறது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். செப்டம்பர் 15-ந் தேதி பெண்களின் கைகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் கடந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன் அது தான், ஸ்டாலினின் பணி. நம்பிக்கையோடு வாக்களித்தவர்க்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே நல்லாட்சி வழங்குவோம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான்று செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் தொடங்கபட்டிருக்கிறது, விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே. என். நேரு. பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி. மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News