தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு... முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

Published On 2024-06-26 06:32 GMT   |   Update On 2024-06-26 06:32 GMT
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
  • முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை:

மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். மத்திய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

"வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என எம்.எல்.ஏ. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் விவாதத்தில் பங்கேற்று பேசி ஆதரவு தெரிவித்தனர்.

இதன்பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News