கோவையில் முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான வணிக வளாகத்தில் 5 கடைகளுக்கு சீல்
- வரி செலுத்துவதற்காக மாநகராட்சி சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
- மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் வரி செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை நடத்துவோர் வரி செலுத்தாவிட்டாலும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான வணிக வளாகம்
வரி செலுத்துவதற்காக மாநகராட்சி சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சேரன் டவர்ஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகம் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமானது.
இந்த வணிகவளாகத்தில் காபி ஷாப், ஓட்டல் உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இந்த வணிக வளாகத்திற்கு மண்டல உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.
அப்போது அவர்கள் வணிக வளாக நிறுவனத்தில் செயல்பட்டு வரும் 5 கடைகள் இதுவரை வரி கட்டாமல் இருந்துள்ளனர். மொத்தம் அவர்கள் ரூ.1 கோடியே 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது.
வரி நிலுவை தொகை செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மாநகராட்சி 70-வது வார்டு பூ மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் சுற்றுச்சுவரை அனுமதியின்றி இடிக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த அவர், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் கடைகளை சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
அனுமதியின்றி சுற்றுச்சுவரை இடித்ததற்காக ஒரு கடையும், வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.