சென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
- சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
- மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
சென்னை:
சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாலையில் வைக்கப்படும் பேனர்களை உடனுக்குடன் அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பேனர்களை அகற்றுவது, தூய்மை பணிகளை செய்வது மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
மண்டல அதிகாரிகள், செயற்பொறியாளர்கள், வருவாய் உதவி அதிகாரிகள், தூய்மை இந்தியா திட்டப்பணியின் செயலாக்க குழு, சுகாதார கல்வி அதிகாரி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பேனர்களை தாங்கி நிற்கும் இரும்பு, மரப்பலகைகளையும் அகற்ற வேண்டும்.
சாலையோரம் குவிக்கப்படும் பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாத்து வைத்து ஏலத்தில் விட வேண்டும். சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றி வன்ண ஓவியம் வரைந்து அழகாக்க வேண்டும். 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகள் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.