லிங்கை தொட்டார்- பணம் போச்சு: ஆன்லைனில் வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 ½ லட்சம் மோசடி
- பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
- செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.
கோவை:
கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.
உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.