யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களில் அட்டகாசம்
தேன்கனிக்கோட்டை,டிச.15-
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.
இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு வன பகுதிக்கு சென்றுள்ளன. வழி நெடுகிலும் ராகி, தக்காளி, பீன்ஸ், கோஸ், தென்னை, மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தவாறு செல்வதால், விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள் கூட்டத்தை, கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறையினர் மாநில எல்லையான தளி, ஜவளகிரி வனப்பகுதியிலே முகாமிட்டு விரட்டி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் ஜவளகிரி, நொகனூர், தேன்கனிககோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக, ஓசூர் சானமாவு வனப்பகுதி, போடூர் பள்ளம் வனப்ப குதி வரை சென்றுள்ளன. இதன்மூலம் அதிகளவில் பயிர்கள் சேதமடைந் துள்ளது.
இதனால், ராகி மற்றும் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுக ளாக காட்டு யானைகள் கூட்டத்தை மாநில எல்லை பகுதியிலே தடுத்து நிறுத் திய நிலையில், தற்போது வனத்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஓசூர் வரை செல்லும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுக்குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இணக்கத்துடன் கருத்துக்களை கேட்டு, வனத்துறை அதிகாரிகள் பணியாற்றாமல் அலட்சியப் போக்குடன் இருப்பதே, யானைகள் அட்டகாசத்திற்கு காரணம். இரவு நேரங்களில் பயிர்களை காவல் காக்க செல்லும் விவசாயிகளுக்கு டார்ச் லைட், பட்டாசுகள் போன்றவற்றை வழங்குவதில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், மரக்கட்டா வனப்பகுதியில் வனத்துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அலட்சியப் போக்கு காரணமாகவும். யானை தாக்கி ஒரு வாலிபர் உயிரிழந்தார் எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், பயிர் சேதங்களை தடுக்கவும், யானைகள்-மனித மோதல்களை தவிர்க்கவும், பேவநத்தம் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 க்கும் மேற்பட்ட யானைகளை, உடனடியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.