தமிழ்நாடு

தொடர் விடுமுறையால் பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2024-05-05 06:05 GMT   |   Update On 2024-05-05 06:05 GMT
  • படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
  • முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாகும்.

இதில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் மேட் விரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எளிதாக இருந்தது. மேலும் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News