வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம்- பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது.
- அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளி நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் பழனியில் கூட்டம் அலைமோதியது.
அடிவாரம் பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் விஷேசங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். முகூர்த்த நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தாராபுரம் மணக்கடவு வீரக்குமார் சுவாமி கோவில் காளையை அலங்கரித்து கிரிவீதியில் வலம் வர செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று பழனியில் கனமழை பெய்த நிலையில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்த போதும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.