தமிழ்நாடு

டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும்- செல்போன் டவரில் ஏறி பிரபல கொள்ளையன் மிரட்டல்

Published On 2023-06-26 06:29 GMT   |   Update On 2023-06-26 06:29 GMT
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
  • குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

நாமக்கல்:

நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது போக்சோ, வீடு புகுந்து திருட்டு, கார் திருட்டு, உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென அவர் ஏறினார்.

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் இதற்காக செல்போன் டவரில் ஏறியதாகவும் கூறி அவர் கூச்சலிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு உற்றார், உறவினர் யாரும் கிடையாது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.

2-10-2017 அன்று அவர் சேலம் மத்திய சிறைக்கு வந்தார். அப்போது நான் ஒரு கார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தேன்.

அன்று அவர் எங்கள் முன் பேசிய வார்த்தைகளும் செயலும் என் உள்ளத்தில் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பை கண்டேன். குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

நான் திருந்துவதற்கு காரணம் நீங்கள் தான். மாணவர்கள் முயற்சி பண்ணுங்க என நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே.

உங்கள் பேச்சைக் கேட்டு நான் தற்போது திருந்தி விட்டேன். நான் இதற்கு முன்பு பலமுறை தங்களை பார்க்க வேண்டும் என முயற்சி செய்தேன்.

வருடப்பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்கு சென்ற போது உங்களை தூரத்திலிருந்து பார்த்தேன்.ஆனாலும் தொடர்ந்து உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தான் தொடர்ந்து முயற்சியை கொண்டுள்ளேன்.

இந்த கடிதத்தை யார் பார்த்தாலும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழக டி.ஜி.பி.-ஐ பார்க்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News