நெல்லையில் குடிபோதையில் 3 ஏ.டி.எம். எந்திரங்கள் உடைத்தவர் கைது
- ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.
- மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மற்றும் வி.எம்.சத்திரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் கே.டி.சி நகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள ஏ.டி.எம். அறைக்குள் புகுந்த அவர் எந்திரத்தின் முகப்பு ஸ்கிரீனை கல்லால் தாக்கி உடைத்துள்ளார்.
பின்னர் அவர் வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த 2 ஏ.டி.எம். அறைகளிலும் புகுந்து கம்பு மற்றும் கல்லால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். இதில் ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரோந்து போலீசார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தன்னிலை மறந்த அளவில் மது குடித்துவிட்டு தள்ளாடியபடி நின்றுள்ளார்.அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது, அவர் நெல்லையை அடுத்த தாழையூத்து செல்வி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முத்து(வயது 50) என்பதும், ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்தால் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.