தமிழ்நாடு

தேர்தலின் போது பிடிபடும் பணம், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வராது- ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

Published On 2024-04-22 10:07 GMT   |   Update On 2024-04-22 10:07 GMT
  • வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்.
  • வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 51 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம். எனவே இது தொடர்பாக புகார் அளித்தும் அமலாக்கத்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், தேர்தலின் போது பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது.

இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News