பழனி கோவிலுக்கு எடப்பாடி பக்தர்கள் வருகை... ராட்சத அண்டாக்களில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு
- எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
- பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.
தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.
இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.