தமிழ்நாடு

கூட்டணி கட்சி தலைவர்கள் கைவிட்டால் தி.மு.க. விழுந்துவிடும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2024-10-22 07:34 GMT   |   Update On 2024-10-22 07:34 GMT
  • அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
  • 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.

சேலம்:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

நீங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து எடுத்து சொன்னதின் விளைவு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் வென்றோம்.

இன்றைக்கு துணை முதலமைச்சர் பேசுகிறார். இது பைனல் மேட்ச் இல்ல என அவர் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்றார். அந்த பைனல் மேட்ச்-ல் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க. அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும்.

வலிமையான அ.தி.மு.க.வை வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. இன்றைக்கு நம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். ஒருபோதும் நடக்காது. ஏனென்று சொன்னால் மக்கள் சக்தி எங்களிடம் உள்ளது. அவர்கள் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தி.மு.க. பலமில்லை. கூட்டணி பலத்தை தான் தி.மு.க. நம்புகிறது.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.

கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 11 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது.

அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 7 சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

அதுமட்டுமல்ல 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான். 30 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. ஆண்ட காரணத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அதனால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெயரை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியது அ.தி.மு.க. அரசாங்கம்.

தி.மு.க. அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. அதுதான் தி.மு.க.வுக்கு அடையாளம். 41 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை செய்தீர்கள்?

அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியும். உயர்ந்த பதவிக்கு தொண்டன் வரக்கூடிய கட்சி அ.தி.மு.க. வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?. உங்களுடன் கிளை கழக செயலாளராக பணியை தொடங்கி உங்களுடைய பேராதரவினால் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய உழைப்பு, ஆதரவு. அத்தனை பேரும் எந்தஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தீர்கள். அதனால் இன்றைக்கு எடப்பாடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாக, எக்கு கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News