தமிழ்நாடு

2026 வெற்றிக்கு கடுமையாக உழையுங்கள் - தொண்டர்களுக்கு பழனிசாமி அழைப்பு

Published On 2024-07-13 07:55 GMT   |   Update On 2024-07-13 07:55 GMT
  • நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.
  • நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமும் 3 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் 4-வது நாளான இன்று சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை/ அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News