தமிழ்நாடு

அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2023-06-06 09:08 GMT   |   Update On 2023-06-06 09:08 GMT
  • உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
  • கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி தி.மு.க. நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்க ராயன்பேட்டை கிளையின் தி.மு.க. செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி தி.மு.க. நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 வருடங்களாக இவர்கள் கைது செய்யப்படாததை மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News