பொன்னேரியில் தண்டவாளத்தை ஆய்வு செய்தபோது என்ஜின் தடம் புரண்டது
- ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர்.
- என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு தண்டவாளம் மற்றும் மின்வயர்களை சரிபார்த்து ஆய்வு செய்ய என்ஜின் வந்தது. லூப் தண்டவாளத்தில் இருந்து முதல் நடைமேடைக்கு சென்ற போது திடீரென ரெயில் என்ஜீனின் 2 சக்கரங்கள் தடம் புரண்டது. இதையடுத்து ஆய்வு செய்ய வந்த என்ஜீன் அந்த தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதுபற்றி உடனடியாக பொன்னேரி ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில்வேபணிமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். பின்னர் அந்த என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.
இதனால் இன்று காலை சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் ரெயில்சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏற்கனவே நேற்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.