தமிழ்நாடு

அரசு பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த ஆசிரியரிடம் அடிவாங்கிய முன்னாள் மாணவர்

Published On 2024-02-13 05:16 GMT   |   Update On 2024-02-13 05:16 GMT
  • நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
  • நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News