பவானி ஆற்றங்கரையில் சாயபட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
- விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் சார்பில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று கோபி-சத்தி மெயின் ரோடு கொடிவேரி அணை பிரிவு பகுதியில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து காலை 10 மணி முதலே விவசாயிகள் கொடிவேரி அணை பிரிவு பகுதிக்கு கையில் பதாகைகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் காலை 10.50 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் ராமசாமி வரவேற்றார். இதில் காலிங்கராயன் பாசன பகுதி சங்கத் தலைவர் வேலாயுதம் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.