தமிழ்நாடு

கடும் வறட்சி நிலவுவதால் ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ

Published On 2024-04-25 03:35 GMT   |   Update On 2024-04-25 03:35 GMT
  • சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
  • வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

ஏற்காடு பகுதியில் கோடை விழா மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஏற்காடு மலைபாதை 8 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி சுமார் 4 ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்தது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர் ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீ கொளுத்தி விட்டு எரிந்தது.

இதையடுத்து சேலத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாதையில் இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்தனர்.

காட்டுத்தீ காரணமாக மலை பாதை முழுவதும் புகையும் சாம்பலுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News