தமிழ்நாடு (Tamil Nadu)

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2024-05-28 06:57 GMT   |   Update On 2024-05-28 06:57 GMT
  • பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள்.
  • எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர்.

ஊட்டி:

புதிய பாராளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.


நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள்.

தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதேபோல சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-


பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்ரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும் என கூறி உள்ளார்.

Tags:    

Similar News