குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது- கவர்னர் உரையில் தகவல்
- ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
- பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.
2022-2023-ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்தி காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.
ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
மத்திய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண்துறை சாதனை படைத்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.
2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.
மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித் திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.
மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.
3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.
ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை பேரிடரால் பாதித்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6.63 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம்-2024 எனும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.
கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ.240 கோடி செலவில் அரசு கொண்டு வந்து சானை புரிந்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா 2022 தரவரிசையில் நம் மாநிலம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இணைய வசதி தற்சார்பு தெழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கி உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4861 கோடி செலவிலும் 187 பாலங்கள் கட்டுமான பணிகளை ரூ.553 கோடி செலவிலும் இந்த அரசு நடப்பாண்டில் மேற்கொண்டு வருகிறது.
விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும் அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 1.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.