ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து கவர்னர் கூறிய கருத்து வேதனையளிக்கிறது- கே.பி.முனுசாமி
- கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை மாவட்டம், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட புதிய உறுப்பினர்களின் சேர்க்கை விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது. ஏற்கனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இருந்து அதிகளவில் உறுப்பினர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தற்போது பொதுச்செயலாளராக பதவி ஏற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
இதற்கான உறுப்பினர் அட்டைகள் விரைவில் வழங்கப்படும். அதில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ படம் இடம் பெற்றிருக்கும்.
ஸ்டெர்லைட் குறித்து கவர்னர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் பொது இடங்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது அழகல்ல. நமது நாட்டின் பிரதமர் உலகளவில் உள்ள தலைவர்கள் எல்லாம் போற்றக்கூடிய ஒரு தலைவராக திகழ்கிறார். அப்படிக்கு இருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டின் சதியோ, வெளிநாட்டின் தலையிடோ இருக்க வாய்ப்பு இல்லை. இதனை பிரதமர் மோடி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவர் நம் நாட்டின் தலைசிறந்த பிரதமர் ஆவார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து ஒவ்வொரும் வெவ்வேறான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து எங்கள் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.