சட்டசபைக்குள் குட்கா - உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் விசாரிக்க ஆணை
- மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறினார்.
அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.