மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தட்டச்சு பயிற்சி மைய உரிமையாளரின் செல்போனில் பெண்களின் ஆபாச படங்கள்
- கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.
இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.
இதையடுத்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.