தமிழ்நாடு (Tamil Nadu)

ஆயுத பூஜை தொடர் விடுமுறை- பஸ், ரெயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2024-10-11 01:35 GMT   |   Update On 2024-10-11 01:35 GMT
  • அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
  • எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர்.

சென்னை:

ஆயுத பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

எனவே கல்வி, பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விரைவு பஸ்களில் பயணிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வந்தவர்களால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பஸ் நிலையங்களை அடைய மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பயணித்தவர்களால் அங்கும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் ஊர் சென்றதாலும், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கடை தெருவுக்கு வந்ததாலும் முக்கிய சாலை, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரெயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர். அவர்கள், வழக்கத்தை விட அதிக தொகை செலுத்தி பயணிக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ், ஆம்னி பஸ் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும், ரெயில்கள் மூலம் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் என மொத்தமாக சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி பலர் தங்கள் சொந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

Tags:    

Similar News