தமிழ்நாடு

மின்சார ரெயில் சேவை குறைந்ததால் அலைமோதிய கூட்டம்

Published On 2024-07-27 08:55 GMT   |   Update On 2024-07-27 08:55 GMT
  • தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
  • எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

சென்னை:

சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. விரைவு ரெயில்களை கூடுதலாக இயக்க வசதியாக கூடுதலாக 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் சரக்கு ரெயில்கள் தடங்கல் இல்லாமல் செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்படுகிறது. இதற்காக சிக்னல்கள் அமைப்பது, பாயிண்டுகள் அமைப்பது ஆகிய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகள் காரணமாக கடந்த 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் பயணிகள் சிரமத்தை மனதில் கொண்டு அதை கைவிட்டு விடுமுறை நாளான இன்றும், நாளையும் மட்டும் மாற்றம் செய்தது.

அதன்படி இன்று காலை 9.20 மணிக்கு பிறகு தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் இன்று காலையில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.

வருகிற 1-ந்தேதி முதல் விரைவு ரெயில் போக்குரத்தில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.

தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எழும்பூரில் இருந்து தினமும் காலை 5.35 மணிக்கு காரைக்குடி செல்லும் விரைவு ரெயில் மாலை 3.45 மணிக்கு காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

இதே போல் எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

சென்னையில் இன்று கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை 9.20 மணி முதல் இந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.


தாம்பரம் பகுதிகளில் இருந்து மின்சார ரெயிலில் சென்னையின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய வந்த பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும் மாநகர பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். இதன் காரணமாக தாம்பரம் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கிருந்து மாநகர பஸ்களில் ஏறி செல்வதற்காக பயணிகள் சாலைகளில் காத்து நின்றதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக மாநகர பஸ்களில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்தனர். இதனால் தாம்பரம் பகுதியில் மாநகர பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News